Wednesday 2 April 2014

போல்ஷிவிசம் என்பது வெறும் கவர்ச்சி சொல்லா?, வழிகாட்டும் கோட்பாடா? (சட்டபூர்வமான, சட்டபூர்வமற்ற போராட்டம் பற்றி மார்க்சியம் )

வலது திரிபு எப்படி தேசிய இன்பிரச்சினையில் பிரிதலுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பதை ரஷ்ய பிரச்சினையின் தனித்த தீர்வாகக் காண்பது தவறோ அதே போல் "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டும் என்று லெனின் கூறுகின்ற போல்ஷிவிசத்தை ரஷ்யாவுக்கு மட்டும் உரித்தானது என்பதும் அதே அளவுக்குத் தவறானதாகும்.

போல்ஷிவிசம் என்பது வெறும் கவர்ச்சி சொல்லா?, வழிகாட்டும் கோட்பாடா?
வலது திரிபு மார்க்சியத்தின் அடிப்படைகளை அன்றைக்கான மார்க்சியம் என்று புறக்கணித்துவிட்டு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர்களின் படங்களை மட்டும் பயன்படுத்துகிறது அதே போல் ரஷ்ய கம்யூனிஸ்ட் கடசி கடைபிடித்த கோட்பாடான போல்ஷிவிசத்தை ரஷ்யாவுக்கு மட்டுமானது என்று கூறிவிட்டு, போல்ஷிவிசம் என்ற வெற்று சொல்லாக்குவது விமர்சனத்துக்கு உட்பட்டதே.
லெனின் கூறுகிறபடி போல்ஷிவிக்குகளை புகழ்வதைக் குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய போர்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயற்சி செய்யவும்
.
ருஷ்யாவில் நகரத் தொழிலாளி வர்க்கமும படைவீரர்களும் விவசாயிகளும், விசேஷ நிலைமைகள் பலவும் காரணமாய் சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலே மிகவும் ஜனநாயகமானதைக் கலைத்திடவும் தயாராக இருந்தனர். போல்ஷிவிக்குகள் அரசியல் நிர்ணய சபையை புறக்கணிக்கவில்லை, அதற்குப் பதில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதற்கு முன்பும் பிற்பாடும் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டனர், என்று லெனின் கூறுகின்ற போல்ஷிவிசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 35:-

"... "இடதுசாரி" கம்யூனிஸ்டுகள் போல்ஷிவிக்குளாகிய எங்களைப் புகழ்ந்து  நிறையவே பேசுகிறார்கள். எங்களைப் புகழ்வதைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, போல்ஷிவிக்குகளுடைய போர்த்தந்திரத்தை மேலும் நன்கு தெரிந்து கொள்ள முயலுங்கள் என்பதாக அவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்று சில நேரங்களில் தோன்றுகிறது.

ருஷ்ய முதலாளித்துவ நாடாளுமன்றமான அரசியல் நிர்ணய சபையின் தேர்தல்களில், 1917 செப்டம்பர்-நவம்பரில், நாங்கள் பங்கெடுத்துக கொண்டோம். எங்களுடைய போர்தந்திரம் சரியா தவறா? சரியல்ல என்றால், இதனைத் தெளிவாக எடுத்துரைத்து நிரூபிக்க வேண்டும், சர்வதேசக் கம்யூனிசத்தின் பிழையற்ற போர்த்தந்திரத்தை வகுத்து உருவாக்குவதற்கு இது அவசியமாகும். அது சரியானதே என்றால், இதிலிருந்து சில முடிவுகளைக் கிரகித்துக் கொண்டாக வேண்டும். ருஷ்யாவின் நிலைமைகளும் மேற்கு ஐரோப்பாவின் நிலைமைகளும் ஒன்றெனக் கொள்ளலாகாது என்பது உண்மையே. ஆனால் "நாடாளுமன்ற முறை அரசியல் வழியில் காலாவதியாகிவிட்டது" என்ற நிர்ணயிப்பின் பொருள் பற்றிய இந்தக் குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்தவரை, எங்களுடைய அனுபவத்தைத் தக்கபடி கணக்கில் எடுத்துக கொண்டாக வேண்டும். ஏனெனில் ஸ்தூலமான அனுபவம் கணக்கில் எடுக்கப்பட்டாலொழிய இது போன்ற நிர்ணயிப்புகள் பொருளற்ற வெற்றுச் சொல்லடுக்குகளாக எளிதில் மாறிவிடும்.

1917 செப்டம்பர்-நவம்பரில், நாடாளுமன்ற முறை ருஷ்யாவில் அரசியல் விழயில் காலாவதியாகிவிட்டதாகக் கருத ருஷ்ய போல்ஷிவிக்குகளான எங்களுக்கு மேலையக் கம்யூனிஸ்டுகள் யாரையும்விட அதிக அளவு நியாயம் இருக்கவில்லையா? இருந்ததென்பதில் ஐயத்துக்கு இடமில்லை. இங்கு எழும் கேள்வி முதலராளித்துவ நாடாளுமன்றங்கள் அதிக காலம் இருந்துள்ளனவா அல்லது சிறிது காலமாய்த்தான் உள்ளனவா என்பதல்ல, பெருந் திரளான உழைப்பாளி மக்கள் சோவியத் அமைப்பை ஏற்றுக் கொள்ளவும், முதலாளித்துவ - ஜனநாயக நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் (அல்லது அது கலைக்கப்பட அனுமதிக்கவும்) எந்த அளவுக்கு (சித்தாந்த வழியிலும் அரசியல் வழியிலும் நடைமுறையிலும்) தயாராய் இருக்கிறார்கள் என்பதே இங்கு எழும் கேள்வி. 1917 செப்படம்பர்-நவம்பரில் ருஷ்யாவில் நகரத் தொழிலாளி வர்க்கமும படைவீரர்களும் விவசாயிகளும், விசேஷ நிலைமைகள் பலவும் காரணமாய், சோவியத் அமைப்பை ஏற்றுக்கொள்ளவும், முதலாளித்துவ நாடாளுமன்றங்களிலே மிகவும் ஜனநாயகமானதைக் கலைத்திடவும், மிகவும் சிறப்பான அளவுக்குத் தயார் நிலையில் இருந்தனர் என்பது கிஞ்சித்தும் மறுக்க முடியாத, நூற்றுக்கு நூறு நிலைநாட்டப்பெற்ற வரலாற்று உண்மையாகும். இருந்தபோதிலும் போல்ஷிவிக்குகள் அரசியல் நிர்ணய சபையை புறக்கணிக்கவில்லை, அதற்குப் பதில் பாட்டாளி வர்க்கம் அரசியல் ஆட்சியதிகாரம் வென்று கொள்வதற்கு முன்வும் பிற்பாடும் தேர்தல்களில் பங்கெடுத்துக கொண்டனர். ருஷ்யாவில் அரசியல் நிர்ணய சபையின் தேர்தல் முடிவுகள் விவரமாகப் பகுத்தாயும் மேற்கூறிய கட்டுரையில், இந்தத் தேர்தல்கள் மதிப்பிடற்கரிய (பாட்டாளி வர்க்கத்துககு மிகமிகப் பயனுள்ள) அரசியல் பலன்களை அளித்தன என்பது என்னால் நிரூபிக்கப் பட்டிருக்கிறதென நான் திடமாக நம்புகிறேன்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)
ஒரு கட்சி என்ற முறையில் போல்ஷிவிக்குகள் டூமா என்கிற "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியதை லெனின் வலியுறுத்தள்ளார்.
"எடுத்துக்காட்டாக, மூன்றாவது நான்காவது டூமாவில் பங்கெடுக்க ஒத்துக்கொண்டது ஒரு சமரசமேயாகும், தற்காலிகமாகப் புரட்சிகரமான கோரிக்கைகளைக் கைவிடுவதேயாகும். ஆனால் இந்தச் சமரசம் முற்றிலும் நம் மீது நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டதேயாகும், ஏனெனில், சக்திகளின் பரஸ்பர நிலையானது நாம் வெகுஜனப் புரட்சிப் போராட்டத்தை நடத்துவதைத் தற்காலிகமாக அசாத்தியமாக்கிவிட்டிருந்தது, மேலும் இந்தப் போராட்டத்துக்கு ஒரு நீண்ட காலப்பகுதியில் தயாரிப்பு செய்யும் பொருட்டு நாம் இப்படிப்பட்ட ஒரு "பன்றிப்பட்டியின்" உள்ளேகூட இருந்து வேலை செய்யத் திறமை பெற்றிருக்க வேண்டியிருந்தது. ஒரு கட்சி என்கிற முறையில் போல்ஷிவிக்குகள் இப்பிரச்சினையை இவ்விதம் அணுகியதானது முற்றிலும் சரியே என்பதை சரித்திரம் நிரூபித்துள்ளது "
(சமரசங்கள் குறித்து)

செம்மையான நாடாளுமன்றத்தையோ, முழுமையான, தூய்மையான நாடாளுமன்றத்தையோ எங்கும் காண முடியாது. முதலாளித்துவ வர்க்கத்தை அதன் சொற்களைக் கொண்டே மடக்க வேண்டும், அது அமைதுள்ள ஏற்பாட்டையும் நடத்தி வரும் தேர்தல்களையும் மக்களுக்கு அது விடுத்துள்ள வேண்டுகோள்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போல்ஷிவிசத்தை விளக்குவதற்கு, முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள தேர்தல் காலங்களில் அல்லாத பிற காலங்களில் சாதியதியம் இருப்பதில்லை என்று லெனின் கூறுகிறார். பெரிய வேலை நிறுத்தங்கள் இதற்கு விதிவிலக்கு மற்றபடி சமுதாய வாழ்வின் எல்லாக் கிளைகளுடனும் மேலும் மேலும் நெருங்கிய இணைப்புக் கொண்ட நடைமுறைப் பணிகளை நிறைவேற்றி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு கிளையாக, ஒவ்வொரு துறையாக கைப்பற்ற நாம் பாடுபட்டாக வேண்டும், என்று லெனின் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 45:-

"ருஷ்யாவிலுங்கூட தேர்தல்களில் சந்தர்ப்பவாதமும், முற்றிலும் முதலாளித்துவ தில்லுமுல்லுகளும் கள்ளத்தனமும் சூதுவாதும் எப்பொழுதும் மலிந்தே இருந்தன. மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கம்யூனிஸ்டுகள் வழக்கத்துககு மாறான, சந்தர்ப்பவாதமல்லாத, பதவிவேட்டையாக அமையாத ஒரு புதிய ரக நாடாளுமன்ற முறையைத் தோற்றுவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிஸ்டுக் கட்சிகள் தமக்குரிய கோஷங்களை வெளியிட வேண்டும், மெய்யான பாட்டாளி வர்க்கத்தினர் நிறுவன ஒழுங்கமைப்பு பெறாத, ஒடுக்கி வதைக்கப்படும் ஏழைகளுடைய உதவியுடன் துணடுப் பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும், தொழிலாளர்களுடைய வீடுகளுக்கும் கிராமப் பாட்டாளிகளின், இருள் மண்டிய கிராமங்களிலுள்ள விவசாயிகளின் குடில்களுக்கும் சென்று அவர்களுடைய ஆதரவைத் திரட்ட வேண்டும் (ருஷ்யாவைக் காட்டிலும் அதிருஷ்டவசமாய் ஐரோப்பாவில் பல மடங்கு குறைவான இருள் மண்டிய கிராமங்களே உள்ளன, பிரிட்டனில் இவற்றின் எண்ணிக்கை இன்னும் குறைவு) அவர்கள் சாராயக் கடைகளுக்குச் சென்றும், பாமர மக்களின் சங்கங்களுக்குள்ளும் கழகங்களுக்குள்ளும் தற்செயலான கூட்டங்களினுள்ளும் ஊடுருவியும் இம்மக்களுடன் பேச வேண்டும்- மெத்தப் படித்தவர்களது (அல்லது நாடானுமன்றத்துக்குரிய) மொழியிலல்ல, அவர்களது நாடானுமன்ற "இடங்களைப் பிடிக்க" முயற்சி செய்யலாகாது, அதற்குப் பதில் மக்களைச் சிந்திக்க வைப்பதற்கே எங்கும் முயற்சி செய்ய வேண்டும், வெகுஜனங்களைப் போராட்டத்தில் இறங்கும் படிக் கவர்ந்திழுக்க வேண்டும், முதலாளித்துவ வர்க்கத்தை அதன் சொற்களைக் கொண்டே மடக்க வேண்டும், அது அமைதுள்ள ஏற்பாட்டையும் நடத்தி வரும் தேர்தல்களையும் மக்களுக்கு அது விடுத்துள்ள வேண்டுகோள்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், போல்ஷிவிசம் என்றால் என்னவென்பதை மக்களக்கு விளக்க முயல வேண்டும்- இவ்வாறு விளக்குவது முதலாளித்துவ ஆதிக்கத்தில்) தேர்தல் காலங்கள் அல்லாத பிற காலங்களில் சாத்தியமாய் இருந்ததில்லை (பெரிய வேலைநிறுத்தங்கள் நடைபெற்ற காலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, ருஷ்யாவில் இக்காலங்களில் மக்களிடையே விரிந்த அளவில் கிளர்ச்சி நடத்துவதற்காக, தேர்தல் காலத்தில் இயங்கியதை ஒத்த அமைப்பு ஒன்று இன்னுங்கூட தீவிரமாய் இயங்கிற்று). மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இதைச் செய்வது மிகக் கடினம், மிகமிகக் கடினம். என்றாலும் இதனைச் செய்ய முடியும், செய்தே ஆகவும் வேண்டும், அருமுயற்சி இல்லாமல் கம்யூனிசத்தின் குறிக்கோள்களைச் சாதிக்க முடடியாது. மேலும் மேலும் நானாவிதமான, சமுதாய வாழ்வின் எல்லாக் கிளைகளுடனும் மேலும் மேலும் நெருங்கிய இணைப்புக் கொண்ட நடைமுறைப் பணிகளை நிறைவேற்றி, முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து ஒவ்வொரு கிளையாக, ஒவ்வொரு துறையாக கைப்பற்ற நாம் பாடுபட்டாக வேண்டும்."
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் போர்த்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் போர்த்தந்திரமும், சட்டபூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப்புறம்பான போராட்ட முறைகளும், மற்றும் இவற்றுக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் வாய்ந்த அடித்தளத்திள் மீது எழுந்த போல்ஷிவிசத்தைப் பற்றி லெனின் கூறுகிறார்:-

நாடாளுமன்றத்தில் பாட்டாளி வர்க்கம் பங்கெடுப்பதை மறுக்கும் அராஜகவாதம் பற்றி லெனின் 23

"கோட்பாடு எனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின் மீது எழுந்த போல்ஷிவிசமானது, மறுபுறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவமை காண இயலாத அனுபவச் செழுமைவாய்ந்த பதினைந்து ஆண்டுக் கால (1903-1917) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்தப் பதினைந்து ஆண்டுகளின்போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் வரிசையாக வந்த வெவேறு இயக்க வகைகளுக்கும் - சட்டபூர்வமானதும் சட்டவிரோதமானதும், அமைதியானதும் புயலின் மூர்க்க கொண்டதும், தலைமறைவானதும பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் - ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை. வேறு எந்நாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களுக்கும் உரிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகிய கால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை.
.....
மாறிமாறிக் கையாளப்பட்ட நாடாளுமன்றப் போராட்ட முறைகளும் நாடாளுமன்றத்துக்குப் புறம்பான போராட்ட முறைகளும், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பு செய்யும் போர்த்தந்திரமும் நாடாளுமன்றத்தில் பங்கு கொள்ளும் போர்த்தந்திரமும், சட்டபூர்வமான போராட்ட முறைகளும் சட்டத்துக்குப்புறம்பான போராட்ட முறைகளும், மற்றும் இவற்றுக்கிடையிலான உறவுகளும் தொடர்புகளும் அளவு கடந்த உள்ளடக்கப் பொருள் வளம் மிக்கதாய்த் திகழ்ந்தன. வெகுஜனங்களும் தலைவர்களும் அதேபோல் வர்க்கங்களும் கட்சிகளும் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகளில் போதனை பெறுவதைப் பொருத்தவரை, இந்தக் காலத்தின் ஒவ்வொரு மாதமும் "சமாதான பூர்வமான",  "அரசியலாப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்கு உட்பட்டதான" வளர்ச்சிக்குரிய ஒரு முழு ஆண்டுக்கு ஈடானதாய் இருந்தது. 1905 ஆம் ஆண்டின் "ஒத்திகை" நடந்திருக்காவிட்டால் 1917ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி சாத்தியமாய் இருந்திக்காது.  "
(இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு)

ரஷ்ய நரோத்னிக் சித்தாந்தவாதியான பக்கூனின் அராஜகவாதத்தை மார்க்சும் எங்கெல்சும் முதலாம் அகிலத்தில் எதிர்த்தனர்.

பக்கூன் பத்திரிகையாளர், அராஜகவாதத்தின் சித்தாந்தவாதி, ரஷ்யப் புரட்சியாளர், நரோத்னிக்காவும் இருந்தார். அகிலத்தில் பக்கூனினுடைய கருத்துக்களும், நடவடிக்கைகளும்  அகிலத்தின் சட்டவிதிக்கு எதிராகவும், மார்க்சியத்துக்கு விரோதமாகவும் மாறிவந்தது. தீவிர இடதுபோக்கை கடைப்பிடித்தார். அரசின் வர்க்கத் தன்மையைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டதை புரிந்து கொள்ளாமல், அனைத்து சமூக பிரச்சினைகளுக்கு அரசையே காரணமாக்கினார். பொதுமக்களின் தன்னிச்சையான எழுச்சியே அரசை அகற்றுவதற்கு போதுமானதாக கருதினார். தொழிலாளர்களின் அரசியல் நடவடிக்கை எதிர்த்தார்.

தனிநபர் எழுச்சி, ரகசிய சதித்திட்டங்கள் மூலம் முதலாளித்துவ அரசமைப்பை தூக்கி எறிவது போன்ற அராஜகவாதமாக இவரது சித்தாந்தம் காணப்பட்டது. புறநிலையிலான காரணங்களின் அடிப்டையில் செயல்தந்திரத்தை (Tactics) வகுத்துக்கொள்ளாமல், சாகசவாத்திலும் - பாட்டாளி வாக்கத்தின் முன்னணிப்படையாக கட்சியை மறுதலித்து, குறுங்குழுவாதத்திலும் - சமூக வளர்ச்சியின் விதிகளைப் பற்றிய விஞ்ஞானப் பார்வையற்று, தனிநபரின் முழுமையான வளாச்சியைப் பற்றிய கற்பனையான கருத்துகளிலும் பக்கூனின் சித்தாந்தம் நிலைபெற்றிருந்தது.

பக்கூன், இத்தாலியில் 1865-1867 ஆண்டுகளில் தங்கியிருந்த போது அவரது அராஜக கருத்துக்கள் உருவாகியது. அவர் ரஷ்யாவின் பின்தங்கிய பொருளாதார நிலைமையினைப் பிரதிபலித்தார். இந்த அராஜகவாதம் ஒடுக்கப்பட்ட விவசாயி மக்களின் விரக்தியை வெளிப்படுத்தும குட்டி முதலாளித்துவ சோஷலிசமாகும்.

மார்க்சும் எங்கெல்சும் இந்தப் போக்கை கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் ஒரு நாளில் வேலை செய்கின்ற நேரத்தைக் குறைப்பதற்காக தனிப்பட்ட முதலாளிக்ள் மீது வேலை நிறுத்தங்கள், போன்றவற்றின் மூலம் நிர்ப்பந்தம் செய்கிற முயற்சி முற்றிலும் பொருளாதாரப் போராட்டமே. இதன் மறுபக்கத்தில், எட்டு மணி நேர வேலை நாள், போன்றவற்றை சட்டத்தைக் கொண்டு வருமாறு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துக்கின்ற போராட்டம் அரசியல் போராட்டமாகும் என்கிறார் மார்க்ஸ். @ (பி.போல்ட்டேக்கு கா.மார்க்ஸ் எழுதிய கடிதத்திலிருந்து- 23-11-1871) இப்படி சட்டத்தைக் கொண்டுவருகிற நாடாளுமன்றத்தை அராஜவாதிகள் முற்றப் புறக்கின்றனர்.

இதனை எங்கெல்ஸ் கூறுகிறார்:"பக்கூனின்வாத "அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்பது" இங்குதான் இட்டுச் செல்கிறது. அமைதியான காலங்களில், எவ்வளவு சிறப்பான முறையில் பாடுபட்டாலும் நாடாளுமன்றத்துக்கு ஒரு சில பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பெறுவதற்குச் சிறிது கூட சந்தர்ப்பமில்லை என்பது தொழிலாளர்களக்கு முனபே தெரிந்திருக்கும் பொழுது, தேர்தல் நடக்கும் பொழுது வீட்டில் உட்கார்ந்திருப்பது மற்றும் தாங்கள் வாழ்கின்ற அரசை, தங்களை ஒடுக்குகின்ற அரசைத் தாக்காமல் எங்குமே இல்லாத-அதன் காரணமாகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாத-அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்று சில சமயங்களில் தொழிலாளர்களை நம்ப வைக்க முடியும். புரட்சிகரமான முறையில் நடந்து கொள்வதற்கு-குறிப்பாக, எளிதில் மனமுடைந்து போகக் கூடியவர்களுக்கு- இதுமிக அற்புதமான வழியாகும்." @ (பக்கூனின்வாதிகளின் வேலை 1871-1875)

இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது. தங்களை ஒடுக்குகின்ற அரசுசை எதிராகாமல், தேர்தலில் பங்கெடுக்காமல், எங்குமே இல்லாத அரசைத் தாக்குவது ஒரு மாபெரும் புரட்சிகரமான நடவடிக்கை என்பது. மனமுடைந்து போகக் கூடியவருக்கு தான் அற்புதமான வழியாகும். மேலும் சம்பவங்கள் பாட்டாளி வர்க்கத்தை முன்னணிக்குக் கொண்டு வந்த உடனே ஒதுங்கியிருப்பதென்பது வெளிப்படையான முட்டாள்தனமாகி விடுகிறது, தொழிலாளி வர்க்கத்தின் சுறுசுறுப்பான அரசியல் தலையீடு தவிர்க்க முடியாத அவசியமாகி விடுகிறது என்கிறார் எங்கெல்ஸ். இல்லாத அரசுடன் போராடுகிற அராஜவாதிகளின் போக்கைப் பற்றி இங்கே எங்கெல்ஸ் கூறுகிறார். லெனின், நாடாளுமன்றம் போன்ற சட்டபூர்வ போராட்டத்தை அற்பப் பணியாக அராஜகவாதிகள் கருதி நிராகரிக்கின்றனர். "மகத்தான நாட்கள்" வரும் என்று கைகட்டி காத்திருப்பதும், மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளை திரட்டும் திறனற்று இருப்பதும் அராஜகவாதிகளின் போர்தந்திரத்தின் நடைமுறை விளைவு என்கிறார்.

""பாய்ச்சல்களையும்" தொழிலாளி வர்க்க இயக்கம் கோட்பாட்டு வழியில் பழைய சமுதாயம் அனைத்துக்கும் பகைமையாய் இருப்பதையும் பற்றிய எல்லா வாதங்களையும் திருத்தல்வாதிகள் வெறும் வாய்வீச்சாய் கருதுகிறார்கள். சீர்திருத்தங்களை அவர்கள் சோஷலிசத்தின் பகுதியளவு நிறைவேற்றமாய்க் கருதுகிறார்கள். அராஜகவாத-சிண்டிக்கலிஸ்டுகள் "அற்பப் பணியை", குறிப்பாய் நாடாளுமன்ற மேடையைப் பயன்படுத்திக் கொள்வதை நிராகரிக்கின்றனர். பின்கூறிய போர்த்தந்திரம் நடைமுறையில் பார்க்கையில் "மகத்தான நாட்கள்" வருமெனக் கைகட்டிக் காத்திருப்பதும் மாபெரும் நிகழ்ச்சிகளைப் படைக்கும் சக்திகளைத் திரட்டும் திறனற்றிருப்பதுமே ஆகும்.

இரு வகையினரும் எது மிகவும் முக்கியமானதோ, அவசரமானதோ அது நடைபெறுவதற்கு- அதாவது, வர்க்கப் போராட்ட உணர்வு படைத்து தமது நோக்கங்களைத் தெளிவாய் உணர்ந்து மெய்யான மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தில் போதமும் பயிற்சியும் பெற்றவையும் எல்லா நிலைமைகளிலும் செவ்வனே இயங்கவல்லவையுமான, சக்தி மிக்க, பெரிய, நன்கு செயல்படும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஒன்றுசேர்க்கப்பவதற்குத் - தடையாகி விடுகின்றனர்" @ (ஜரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள்)

இவ்வாறு, பக்கூனுக்கு கடுமையான விமர்சனத்தை முதலாம் மார்க்சும் எங்கெல்சும் அகிலத்தில் முன்வைத்தனர்.

நாடாளுமன்ற புறக்கணிப்பாளர்கள் நினைப்பது போல் புரட்சியை பிரச்சாரத்தினால் மட்டும உருவாக்க முடியாது. புரட்சிக்கு ஊறு செய்கிற புறக்கணிப்பாளர்களைப் பற்றி லெனின்:-
"..பிரிட்டிஷ் கம்யூனிஷ்டுகள் நாடாளுமன்றச் செயற்பாட்டில் பங்கு கொண்டு ஹெண்டர்சன், ஸ்னோடன் அரசாங்கத்தின் விளைவுகளைத் தொழிலாளி வெகுஜனங்கள் நடைமுறையில் கண்டுணருவதற்குத் துணை புரிய வேண்டும், லாயிட் ஜார்ஜ், சர்ச்சில் இவர்களது ஒன்றுபட்ட சக்திகளைத் தோற்கடிக்க ஹெண்டர்சன்களுக்கும் ஸ்னோடன்களுக்கும் உதவ வேண்டும் என்பதையே சந்ததேகத்துக்கு இடமின்றி தெளிவுபடுத்துகிறது. வேறுவிதமாய்ச் செயல்படுவதானது, புரட்சி இலட்சியத்துக்கு ஊறுசெய்வதாகவே இருக்கும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தில் பெருமபாலோரது அபிப்பிராயங்களில் மாற்றம் உண்டாக்காமல் புரட்சி சாத்தியமன்று. இந்த மாற்றத்தை வெகு ஜனங்களுடைய அரசியல் அனுபவத்தால் உண்டாக்க முடியுமேயன்றி, பிரச்சாத்தினால் மட்டும் ஒரு நாளும் உண்டாக்கிவிட முடியாது"
இடதுசாரி கம்யூனிசம்- இளம்பருவக் கோளாறு


ஆக சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற போராட்டத்தை ஒருங்கிணைக்கும் திறம்பெற்ற கட்சியே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக விளங்கமுடியும்.

2 comments:

  1. அருமை. எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள்.

    அன்புடன்

    சு. துளசிதாஸ்
    மலேசியா தேசிய பல்கலைகழகம்
    மலேசியா

    S.TULASIDASS M.A (DENMARK)
    Centre for Corporate Communication
    Universiti Kebangsaan Malaysia (UKM)
    43600 UKM Bangi, Selangor
    MALAYSIA.
    Email: tulasidass@gmail.com

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.

      Delete